வெறும் 90 நிமிடம் தான்… பெங்களூர்-மைசூர் புதிய விரைவுச் சாலை..!

பெங்களூர்-மைசூர் இடையேயான விரைவுச்சாலை திறப்பு விழாவிற்கு வேகமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், 10-வழி விரைவுச்சாலையான இதன் படங்களை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரூ.9000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விரைவுச்சாலை இந்த பிப்ரவரி மாத இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்படுவார்  என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் முக்கிய இரு மாநகரங்களான பெங்களூர் மற்றும் மைசூர் இடையேயான சாலை பயண நேரமானது தற்சமயம் ஏறக்குறைய 3 மணிநேரமாக உள்ளது. புதிய விரைவுச்சாலையின் மூலம் வெறும் 90 நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்த 2 நகரங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு சென்றுவிட முடியும்.

அதாவது, வழக்கத்தை காட்டிலும் பயண நேரம் பாதியாக குறையும். இந்த விரைவு நெடுச்சாலையில் மொத்தம் 10 பாதைகள் இருப்பதாக ஏற்கனவே கூறினோம் அல்லவா. ஆனால் 6 பாதைகள் மட்டும் தான் மைய நெடுஞ்சாலைக்கானது. இந்த 6 பாதைகளுக்கு இரு பக்கமும் தலா 2 பாதைகளை கொண்ட சர்வீஸ் சாலைகள் உள்ளன. திறக்கப்பட்ட பின் இந்த விரைச்சாலையில் பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு காரையோ அல்லது கனரக வாகனத்தையோ தான் எடுத்து செல்ல வேண்டும். அல்லது அந்த வழியாக செல்லும் பேருந்தில் பயணிக்கலாம்.

ஏனெனில் இந்த புதிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிள்கள் உள்பட ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் போன்ற குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள் அனுமதிக்கப்பட போவதில்லை. இவற்றிற்காகவே சர்வீஸ் சாலைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 117கிமீ தொலைவிற்கு நீளம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலை பெங்களூரு, மைசூருக்கு இடையே நிடாகட்டா என்ற மற்றொரு முக்கிய நகரத்தையும் ஒருங்கிணைக்கிறது.

கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட இந்த நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகளில் ஒரு பகுதியாக இந்த நெடுஞ்சாலையை ஸ்ரீரங்கப்பட்னா நெடுஞ்சாலை உடன் இணைக்கும் பணிகளும் கடந்த ஜனவரி 30ஆம் தேதியோடு நிறைவடைந்துள்ளன. இந்த இணைப்பிற்காக 7 கிமீ தொலைவு நீளத்திற்கு இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த புதிய விரைவுச்சாலையினை கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் நேரில் பார்வையிட்டார்.

அப்போது இந்த விரைவுச்சாலை வருகிற 2023 பிப்ரவரி மாதத்தில் திறக்கப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர் நிதின் கட்கரி, “இந்த மைசூர்-பெங்களூர் விரைவுச்சாலையில் பயணம் செய்யும்போது நீங்கள் என்னை நினைத்து பார்ப்பீர்கள்” என தெரிவித்தார். நிதின் கட்கரியின் பதிவின் மூலம் இந்த புதிய விரைவுச்சாலை இணையத்தில் பிரபலமாகி இருப்பதற்கு அதன் படங்கள் முக்கிய காரணமாகும். ஏனெனில் இதன் படங்கள் நன்கு உயரத்தில் இருந்து உயர் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த படங்களை எடுத்தவர், ‘ட்ரோன்மேன்’ என இணையத்தில் பிரபலமான ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். அவர் இவ்வாறு அரசாங்க விஷயங்கள் பலவற்றிற்கு ட்ரோன்கள் மூலம் படங்களை எடுத்து கொடுத்துள்ளார். அதிலிலும் குறிப்பாக, மைசூர்-பெங்களூர் இடையேயான புதிய விரைவுச்சாலையின் இந்த படங்கள் கூடுதல் அழகாக காட்சியளிக்கின்றன. அதேநேரம் இந்த விரைவுச்சாலையில் மற்றொரு ஆபத்தான விஷயமும் மறைந்திருப்பது சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் சமீபத்திய பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த ஆபத்து, இரும்பு திருட்டு ஆகும்.

ஆம் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலையில் உயர் தரத்திலான இரும்பு கம்பிகளும், பேரிகேட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை அறிந்துக்கொண்ட சில சமூக விரோதிகள் அவற்றை இரவோடு இரவாக வெட்டி திருடி எடுத்து செல்வதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி, வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதாவது, சில இடங்களில் நான்கு இரும்பு கம்பிகளில் 2 திருடப்பட்டு 2 மட்டுமே உள்ளது. அந்த 2 கம்பிகள் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே விழலாம்.