எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அண்ணாமலை..!

ரோடு கிழக்கு இடைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவையொட்டி வருகிற 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அத்துடன் தங்களது கூட்டணி கட்சியினரை சந்தித்து இரு அணியினரும் ஆதரவு கோரினர். இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தமிழக பாஜக சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அண்ணாமலை வருகை புரிந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிடி ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆதரவு கோரிய நிலையில் தற்போது அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவளிப்பது குறித்த பேச்சு வார்த்தைக்காக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.