வெறும் 20 நிமிஷம் போதும்…. பெங்களூர் டூ ஓசூருக்கு செல்லலாம்… ரூ.50000 கோடியில் விரைவில் வருகிறது சுரங்கபாதை.!!

பெங்களூர்: கடும் போக்குவரத்து நெரிசலால் தற்போது பெங்களூரில் இருந்து ஓசூருக்கு 2 மணிநேரத்துக்கும் மேலாக பயணம் செய்ய வேண்டி உள்ளது.

இந்நிலையில் தான் பெங்களூர் மைசூர் ரோட்டில் இருந்து ஓசூர் ரோட்டுக்கு வெறும் 20 நிமிடத்தில் பயணம் செய்யும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடியில் சுரங்கபாதை திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூர் நகரில் ஆண்டுதோறும் மக்கள் தொகை என்பது உயர்ந்து கொண்டே செல்கிறது. முக்கியமான ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் அங்கு இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

தற்போதைய சூழலில் பெங்களூர் நகரின் மக்கள்தொகை என்பது 1 கோடியை கடந்துவிட்டது. மேலும் வாகனங்களின் எண்ணிக்கையும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அனைத்து சாலைகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக காலை, மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் தான் உள்ளது. இத்தகைய போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கர்நாடகா அரசும், மத்திய அரசும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மேம்பாலங்கள், புதிய சாலைகள், வெளிவட்ட சாலை (அவுட்டர் ரிங்ரோடு) உள்ளிட்டவற்றை அமைத்து வருகின்றன.

இந்நிலையில் தான் அடுத்த கட்டமாக மெகா திட்டம் ஒன்றை கர்நாடகா அரசு வகுத்துள்ளது. அதன்படி ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 30 கிலோமீட்டர் தொலைவுக்கு பெங்களூர் நகரில் இருந்து தமிழ்நாட்டின் ஓசூரை இணைக்கும் வகையில் 5 முக்கிய சாலைகள் வழியாக சுரங்கபாதை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த சுரங்கபாதை திட்டம் என்பது பெங்களூரில் உள்ள மைசூர் ரோட்டையும், ஓசூர் ரோட்டையும் இணைக்கும் வகையில் துமகூரு ரோடு, பல்லாரி ரோடு, பழைய மெட்ராஸ் ரோடு வழியாக 30 கிலோமீட்டர் தொலைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் பெங்களூர் பீனியாவில் உள்ள மைசூர் ரோட்டில் இருந்து ஹெப்பால், கேஆர்புரம் வழியாக ஓசூர் ரோடு வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பெங்களூர் நகரில் முக்கிய 5 சாலைகள் இடையேயான பயண நேரம் என்பது 2 மணிநேரத்தில் இருந்து 20 நிமிடமாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது பெங்களூர் நகரை சுற்றி மேற்கூறிய 5 முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் 62 கிலோமீட்டர் தொலைவுக்கு வெளிவட்ட சாலை செல்கிறது. இந்த சாலை என்பது வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இருப்பினும் இந்த வெளிவட்ட சாலைகளில் இருந்து பெங்களூர் நகருக்குள் செல்லும் ரோட்டில் நுழைந்தால் அதிகப்படியான டிராபிக் உள்ளது. இது பெங்களூர் நகரின் பெயருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும் பொதுமக்களுக்கும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஐடி உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளதால் பெங்களூர் உலகளவில் பெயர் பெற்ற நகராக இருக்கும் நிலையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெங்களூருக்கு கெட்டப்பெயரை பெற்று கொடுக்கும் வகையில் உள்ளது.

மேலும் பெங்களூர் நகரில் புதிதாக ஒரு சாலை அமைக்க வேண்டும் என்றால் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. இதனால் தான் சுரங்கபாதை திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பெங்களூர் மண்டல அதிகாரி விவேக் ஜெய்ஸ்வால் கூறுகையில், ”பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்றால் சுரங்கபாதை திட்டம் தான் சிறந்த தீர்வாக இருக்கும்.

ஏனென்றால் வெறுமனே சாலை அமைக்கும் திட்டம் என்பது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும், கோவில், மசூதிகளின் இடமாற்றம், குறுக்கே பில்லர்களுடன் இருக்கும் மெட்ரோ ரயில் பாதை என பல பிரச்சனைகள் வரும்.இந்த திட்டத்துக்கான பணத்தை மாநில அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது பெரிய தொகை தான். இருப்பினும் இது முடியாது என நாங்கள் நினைக்கவில்லை” என்றார்.

மேலும் இந்த திட்டம் என்பது குடியிருப்பு நலச்சங்கம், தனியார் வணிக வளாகங்கள், அப்பார்ட்மென்ட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு சுரங்கபாதையில் இருந்து பாதை வசதி செய்து கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு இந்த திட்ட பணிகளை நிறைவேற்ற துணை முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் சிங்கப்பூர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின்போது சுரங்க பாதை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், கட்டட முறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.