நாட்டை அழிப்பதே ஊழல்வாதிகள் தான்: எல்கர் பரிஷத் வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்..!

புதுடெல்லி: ‘ஊழல்வாதிகள் தான் இந்த நாட்டை அழிப்பவர்கள். ஊழல் செய்து விட்டு பண பலத்தால் தப்பி ஓடிவிடுகின்றனர்,’ என எல்கர்-பரிஷத் வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக ஆவேசமடைந்தனர்.

மகாராஷ்டிராவின் பீமா கொரேகானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வில் கடும் வன்முறை வெடித்தது. இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகாவை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. இந்நிலையில், 70 வயதாகும் நவ்லகாவுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறு இருப்பதால் அவரை வீட்டு சிறைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நவ்லகா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ‘நவ்லகாவின் உடல் நலக்குறைவுக்கு சிறையில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையின் அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன்,’ என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்ஐஏ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, ‘நவ்லகாவுக்கு எதுவும் ஆகாது. அவருக்கு சிறையில் வேண்டிய வசதிகளை செய்து தருகிறோம். நவ்லகா போன்றவர்கள் இந்த நாட்டை அழிக்க நினைக்கிறார்கள்,’ என்று வாதிட்டார். இதைக் கேட்டு ஆவேசமடைந்த நீதிபதிகள், ”உண்மையிலேயே இந்த நாட்டை அழிப்பவர்கள் யார் தெரியுமா? ஊழல்வாதிகள்தான்.

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் என்ன நடக்கிறது தெரியுமா? ஊழல்வாதிகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதநிதிகள் என கூறிக் கொள்பவர்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்ட வீடியோக்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் எல்லாம் இந்த நாட்டிற்கு எதிராக எதுவும் செய்யவில்லையா? ஊழல்வாதிகள் ஊழல் செய்த பண மூட்டைகளை வைத்துக் கொண்டு எளிதில் தப்பி விடுகின்றனர்,’ என கடுமையாக கண்டித்தனர். பின்னர், ”நவ்லகாவை நாங்கள் வீட்டு காவலில் அனுப்பலாம் என நினைக்கிறோம். அதற்கான என்னென்ன கட்டுப்பாடுகளை என்ஐஏ விதிக்கும் என்பது தொடர்பான அறிக்கை தர வேண்டும்,’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். இதே வழக்கில் கைதாகி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமூக ஏற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி ஜாமீன் கிடைக்காமல் கடந்த ஆண்டு மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.