சென்னை: ரேஷன் கடைகளில் இருப்பில் உள்ள பண்டங்களின் விவரங்களை குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தினமும் காட்சிப்படுத்த வேண்டும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
நியாயவிலைக்கடை தொடர்பாக புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர் உணவுத்துறை செயலாளர், உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் உள்ளிட்டோரின் எண்கள் இடம்பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், நியாயவிலைக் கடைகளில் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுவதில்லை.
இந்நிலையில், இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆணையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் அட்டைதாரர்கள் கவனத்திற்கு தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் பராமரித்து வைக்கப்பட வேண்டும் என அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதன் செயலாக்கம் கோரி தொடர்ந்து நினைவூட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அட்டைதாரர்களிடமிருந்து பெறக்கூடிய புகார்களின் அடிப்படையிலும் நியாயவிலைக் கடைகள் தணிக்கையின்போது அறியக்கூடிய விவரங்களின் அடிப்படையிலும் தகவல் பலகைகள் நியாய விலைக் கடைகளில் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என தெரிய வருகிறது.
எனவே பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தகவல் பலகைகள் கீழ்காணும் விவரங்களை உள்ளடக்கி குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இன்றிமையாப் பண்டங்கள் இருப்பு விவரம் கடைப்பணியாளரால் தினசரி பூர்த்தி செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
வேலை நேரம், நியாயவிலைக் கடையில் இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம்- ஆரம்ப இருப்பு, பெறப்பட்டது. விநியோகம் செய்யப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் விற்பனை விலை ஆகியவை அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும்.
நியாயவிலைக்கடை தொடர்பாக புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர் 044 25671427, உணவுத்துறை செயலாளர் 044 25672224, உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் 044 28592255 உள்ளிட்டோரின் எண்கள் இடம்பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் பாதி நாட்களில் பொருட்கள் ஒழுங்காக விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இனியாவது சரியாக பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
Leave a Reply