செல்வாக்கான நபர்கள் மீதான ஊழல் வழக்கு விசாரிப்பது சிரமம்

ந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், கந்தசாமி மற்றும் விஜயகார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு அனுப்பிய விளக்கம் கடிதம் ஜூலை 28-ஆம் தேதி கிடைக்கப்பெற்றதாகவும், அதன்மீது, பரிசீலனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.அதேநேரத்தில் கடந்த 27 ஆம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதையடுத்து, இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளதாக கூறிய நீதிபதி, அனுமதி பெறவே இவ்வளவு சிரமங்கள் என்றால், தொடர்ந்து என்ன நடக்கும் என கடவுளுக்குத்தான் தெரியும் என அதிருப்தி தெரிவித்தார். பின்னர், வழக்கு தொடர ஒப்புதல் வழங்க தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்தும், ஒப்புதல் கோரிய கடிதத்தின் தற்போதைய நிலை குறித்தும் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க மத்திய அரசின் சார்பு செயலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.