திமுக எம்.எல்.ஏக்கள் காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றம்!

முதல்வர் விஜய்யின் சர்ச்சைக்குரிய பேச்சுகளை சபை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இருக்கையை முற்றுகையிட்டதால் அமளி ஏற்பட்டது.

சட்டசபை விதிகளை மேற்கோள்காட்டி திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது, திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அவை முன்னவர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். இந்த அமளி நீடித்த போதும், முதல்வர் விஜய்யின் சர்ச்சை பேச்சுகளை சபைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.ஆனாலும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்னர் அமர்ந்து முழக்கமிட்டனர். இதனையடுத்து திமுக எம்.எல்.ஏக்களை சபையில் இருந்து வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து சட்டசபைக்குள் நுழைந்த சபைக் காவலர்கள், திமுக எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக சபையில் இருந்து வெளியேற்றினர். திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்ளிட்டோர் சிலரை சபை காவலர்கள் குண்டு கட்டாக வெளியேற்றினர்.