2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

மிழ்நாட்டில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதிக்கும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 6ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த நிலையில், பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் ஜோசப் விஜய் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். முதல்வர் விஜய் இரு தொகுதிகளில் வென்ற நிலையில் அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். அத்துடன் அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.இதனால், தமிழ்நாட்டில் தற்போது 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளைத் தவிர ஏனைய 5 தொகுதிகளின் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்ற வழக்கு பிரச்சனையில் சிக்காமல் உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இடைத் தேர்தல் தேர்தல் வாக்குப் பதிவு நாள் – 06.10.2026

வாக்கு எண்ணிக்கை நாள் – 09.10.2026

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் – 09.09.2026

வேட்புமனு தாக்கல் கடைசி நாள் – 16.09.2026

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் – 19.09.2026

தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகிய இருவரும் தங்கள் தொகுதியில் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் தவெக மீண்டும் வாய்ப்பு வழங்குமா அல்லது வேறு நபர்களை வேட்பாளர்களாக களமிறக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான திமுக தற்போது கூட்டணி கட்சிகளை இழந்து நிற்கும் நிலையில் இந்த இரு தொகுதிகளுக்கும் எத்தகைய வியூகத்தை எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெகவிடம் எம்எல்ஏக்களை இழந்து நிற்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இந்தமுறை யாரை வேட்பாளர்களை களமிறக்குவார்கள் ஆர்வமும் உருவாகியுள்ளது. அன்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் இடைத்தேர்தலுக்கு தயாராக கட்சி தலைமை அறிவுறுத்தியதாகவும் உத்தேச வேட்பாளர்கள் குறித்து பேசப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. இவர்களுடன் சீமானும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த இரு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் படு சுவாரஸ்சியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டை போலவே, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெற்றிபெற்று ராஜினாமா செய்த தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.