ஐரோப்பா மட்டும் வாங்கலையா..? அமெரிக்கா விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி.!

டெல்லி: ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களின் ஒருவரும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகருமான தலீப் சிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்த பயணத்தில் இந்திய – ரஷ்யா இடையிலான உறவை அவர் விமர்சனம் செய்தார்.

ரஷ்யாவுடன் எந்த நாடும் பொருளாதார ரீதியாக உறவுகளை மேற்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. ரஷ்யாவின் மத்திய வங்கியுடன் உறவு மேற்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. ரஷ்யாவுடன் தற்போது இந்தியா மேற்கொள்ளும் கூடுதல் கச்சா எண்ணெய் வர்த்தகம் தவறானது கிடையாது.

ஆனால் அதை வேகமாக அதிகரிக்க கூடாது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் அதிகமாக ரஷ்யாவை நம்பி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அனைத்திற்க்கும் ரஷ்யாவை நம்பி  இருக்க கூடாது. டாலரை அடிப்படையாக கொண்ட வர்த்தகத்திற்கு எதிரான வர்த்தகத்தை எங்கள் நட்பு நாடுகள் மேற்கொள்வதை நாங்கள் விரும்ப மாட்டோம், என்று அவர் குறிப்பிட்டார். அதாவது கூடுதல் கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும், ரஷ்யாவுடன் இந்தியா ரூபீள் வர்த்தகத்தை மேற்கொள்ள இருப்பதை தலீப் சிங் விமர்சனம் செய்து இருந்தார்.

இதற்கு நேற்று அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். நேற்று இந்தியா – யுகே இடையிலான முதல் India-UK Strategic Futures Forum நிகழ்ச்சியில் யுகேவின் வெளியுறவுத்துறை செயலாளர் ட்ரூஸ் உடன் அவர் கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் ஜெய்சங்கரிடம் இந்தியா – ரஷ்யா உறவு, எண்ணெய் வர்த்தகம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், இந்தியா எண்ணெய் வர்த்தகத்தில் நலன் டீல் கிடைத்தால் அதை வாங்குவதில் தஹ்வாரு என்ன? இது இந்தியாவின் தனிப்பட்ட முடிவு.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஐரோப்பாவும் கூட ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்குகிறது. ரஷ்யாவிடம் பிப்ரவரியில் ஐரோப்பா வாங்கிய எண்ணெய்யை விட 15 சதவிகிதம் அதிகமாக மார்ச்சில் வாங்கி உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு எதிராக மட்டும் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்களோ என்ற கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது.

எண்ணெய் விலை உயரும் போது மார்க்கெட்டில் குறைவான விலைக்கு விற்கும் நாட்டிடம் செல்வது சாதாரண நடைமுறைதான். அதை எல்லா நாடுகளும் செய்யும். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். ரஷ்யாவிடம் அதிகம் எண்ணெய் வாங்கும் நாடு ஐரோப்பாதான். நாங்கள் அதிகமாக எண்ணெய் வாங்குவது மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து. அமெரிக்காவிடம் இருந்து 8 சதவிகிதம் எண்ணெய் வாங்குகிறோம்.

ரஷ்யாவிடம் இருந்து வெறும் 1 சதவிகிதம் மட்டுமே எண்ணெய் வாங்குகிறது. இன்னும் 3 மாதம் கழித்து பார்த்தாலும் இந்த நிலை மாறாது. 3 மாதங்களுக்கு பிறகும் ரஷ்யாவிடம் அதிகம் எண்ணெய் வாங்கும் பட்டியலில் நாங்கள் இருக்க மாட்டோம். அந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் வேறு நாடுகள்தான் இருக்கும். ஆனால் இந்தியா மீதுதான் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட உண்மையான பொருளாதார பாதிப்புகள் இனிதான் நமக்கு தெரிய வரும். இனிதான் அதன் பாதிப்புகளை நாம் உணர்வோம், என்று ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவின் தலீப் சிங் விமர்சித்து இருந்தார். இது சர்ச்சை ஆன நிலையில்தான் இப்போது ஜெய்சங்கர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.