அதிகரிக்கும் மூலப்பொருட்களின் விலை… தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் – 6 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு.!!

தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 50 இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 300 பகுதிநேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல் 2000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. . தீப்பெட்டி உற்பத்திக்கு மூலப்பொருட்களாக பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் ஆகியவை தேவைப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தீப்பெட்டியை உற்பத்தி செய்யும் செலவும் கூடி வருகிறது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அதன் விலையை 1 ரூபாயிலிருந்து 2 ரூபாயாக உயரத்தினர்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள் விலை என்பது 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு பெரும் நெருக்கடியைத் கொடுத்துள்ளது. கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க கூட்டத்தில் 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் விலையை 300 ரூபாயிலிருந்து 350 ஆக உயர்த்தியது. இன்று முதல் இந்த விலை நடைமுறைக்கு வருகிறது.

இந்நிலையில் வருகிற 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆலைகளையும் மூட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். இதற்கு கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது . 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் விலையை உயர்த்த மொத்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் ஒரு நாளைக்கு ஏழு கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என்றும் மறைமுகமாக 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.