பெங்களூரு: ஆசியாவின் மிகப் பெரிய ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தகண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
மத்திய பாதுகாப்புத் துறை கடந்த 1996ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை நடத்தி வருகிறது. ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான இதில் பல்வேறு வெளிநாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்று வானில் சாகசங்களில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் 14-வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது.
இதற்கான தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் விமானப்படை அதிகாரிகள் பங் கேற்கின்றனர். பிரதமர் மோடி 14-வது ‘ஏரோ இந்தியா 2023’ விமான கண்காட்சியை தேசிய கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
வருகிற 17ம் தேதி வரை 5 நாட்கள் இந்த கண்காட்சியில் இந்திய போர் விமானங்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த அதி நவீன போர் விமானங்களும் பங்கேற்கின்றன.
முதல் நாளான இன்று நாட்டின் இலகு ரக தேஜாஸ் போர் விமானம், ஹெச்டிடி-40 போன்ற உள்நாட்டு விமானங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.
இதுதவிர அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் எம். ஹெச். ஹெலிகாப்டர், 60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர், இஸ்ரேலின் ஏரோஸ் உள்ளிட்ட விமானங்களும் சாகசத்தில் ஈடுபடுகின்றன.
இந்த கண்காட்சியில் மொத்தமாக 811 அரங்குகள் இடம்பெறுகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் 701 இந்திய விமானநிறுவனங்களின் அரங்குகளும், 110 வெளிநாட்டு அரங்குகளும் இடம்பெறுகின்றன. உள்நாட்டு உபகரணங்கள், தொழில்நுட்பங் களை காட்சிப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏரோ இந்தியா விமான கண்காட்சியை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கும் வட்டமேஜை மாநாடு இன்று நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு பெங்களூருவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Leave a Reply