ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவிடம் உதவி கோரியது அமெரிக்கா..!

வாஷிங்டன் : ‘ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எந்த முயற்சி எடுத்தாலும், அதை அமெரிக்கா வரவேற்கும்’ என, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.சமீபத்தில், ரஷ்யா சென்றிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அங்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்ததாவது:உக்ரைன் மக்களின் கொடுந் துயரத்துக்கு, புடின் என்ற ஒரு நபர் மட்டுமே காரணம். ஏவுகணைகளை ஏவி அந்நாட்டின் உள்கட்டமைப்புகளை நாசம் செய்வதால், ஏற்கனவே துயரத்தில் இருக்கும் உக்ரைன் மக்கள் மேலும் அவதிக்கு உள்ளாவர். அதற்குப் பதிலாக, அவர் இப்போதே போரை நிறுத்த வேண்டும்.இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே, புடினிடம் பேசி அவரை சமாதானப்படுத்த முடியும். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை நிறுத்த, பிரதமர் மோடி எந்த முயற்சி எடுத்தாலும், அதை அமெரிக்கா வரவேற்கும்.ரஷ்யாவும், உக்ரைனும் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை வாயிலாக ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டும் என, இந்தியா திரும்பத் திரும்ப கூறி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, இரு நாட்டு தலைவர்களிடமும் பலமுறை பேச்சு நடத்தியுள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த போதிலும், இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான நட்பு வலுவாக உள்ளது.அதேநேரம், பல மேற்கத்திய நாடுகளில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை காரணமாக அமைதியின்மை அதிகரித்துவரும் நிலையில், கடந்த சில மாதங்களாக ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.