தீவிரமடையும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : தொழிலதிபர் ஆறுமுகசாமியிடம் போலீஸார் தீவிர விசாரணை.!

கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாருக்கு சொந்தமான, சென்னை சிஐடி நகரில் உள்ள வீட்டில் கடந்த2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சில ஆவணங்களை கைப்பற்றினர். கோடநாடு எஸ்டேட்டில் மாயமான சில ஆவணங்கள், செந்தில்குமாரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார் தொழிலதிபர் செந்தில்குமாரிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்றும் 2-வது நாளாக போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் செந்தில்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதேபோல, செந்தில்குமாரின் தந்தையும், மணல் வியாபாரம் சார்ந்த தொழிலதிபருமான ஓ.ஆறுமுகசாமிக்கும் விசாரணைக்கு ஆஜரமாகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்திலுள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் தொழிலதிபர் ஓ.ஆறுமுகசாமி நேற்று ஆஜரானார்.

கோடநாடு எஸ்டேட்டில் மாயமான ஆவணங்கள் செந்தில்குமாரிடம் எப்படி வந்தது, வேறு என்னென்ன தகவல்கள் தெரியும் என்பது போன்ற கேள்விகள் கேட்டு அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.