ட்விட்டரை வாங்கும் திட்டத்தை கைவிட்டார் எலான் மஸ்க்.. வழக்கு தொடர நிறுவனம் அறிவிப்பு…

வாஷிங்டன்: ட்விட்டர் சமூகவலைதளத்தை வாங்கும் 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைவிட்டார்.

இதையடுத்து அவர் மீது வழக்கு தொடர போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் , ஏற்கெனவே டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க பல நாட்களாக பேசப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை போட்டார்.

இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ 33 ஆயிரம் கோடி மதிப்பு) வாங்குவதாகவும் அறிவித்தார். இது குறித்து ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் எலான் மஸ்க் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ட்விட்டரில் டைப் செய்யும் எழுத்துகளின் எண்ணிக்கையை 280 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். அது போல் அனைவருக்கும் ப்ளூ டிக் உள்ளிட்டவற்றையும் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்திருந்தார். போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்கத் தவறினால் ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிடுவேன் என கடிதம் மூலம் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவுகளை கைவிட்டுவிட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு ட்விட்டர் நிறுவனம் சரியான பதிலை அளிக்கத் தவறியதால் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை கைவிடுவதாக மஸ்க் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதமாக சரிந்தன.

எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு மூலம் ட்விட்டருக்கும் அவருக்கும் இடையே சட்ட போராட்டம் நடத்தும் சூழலை உருவாக்கிவிட்டது. முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி மஸ்க் இந்த ஒப்பந்தத்தை முடிக்கவில்லை என்றால் 1 டாலர் பில்லியன பிரேக் அப் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதை முன் வைத்து ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்குத் தொடர அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.