அனைத்து முதியோர் இல்லங்களிலும் ஆய்வு: அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு..!!

சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதியோர் இல்லங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும், விதிமுறைகள் வகுக்கவும் கோரி, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்தது.அதன் தொடர்ச்சியாக, 2016 நவம்பரில், பல வழிமுறைகளை பிறப்பித்து, சமூக நலத் துறை அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணை பின்பற்றப்படவில்லை எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார்.சமூக நலத் துறை பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, முதியோர் இல்லங்களை நடத்தும் தனியார் சிலர், மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண், சிறப்பு பிளீடர் பாலதண்டாயுதம் ஆஜராகினர்.

நீதிமன்றத்துக்கு உதவும் வகையில், ‘அமிகஸ் கூரி’யாக, வழக்கறிஞர் நாராயணசாமி ஆஜரானார்.இவ்வழக்கில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சமூக நலத் துறை பிறப்பித்த அரசாணை செல்லும். பொது நல வழக்கில் எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், நிர்வாக உத்தரவு பிறப்பிக்க, மாநில அரசு எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.தமிழகத்தில் இயங்கும் அனைத்து முதியோர் இல்லங்களிலும் ஆய்வு மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நலத் துறை பிறப்பித்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்துவதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.ஆய்வு மேற்கொண்ட பின், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, முறையான உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும். முதியோர் இல்லங்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணிக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதியோர் இல்லங்களில் சுகாதாரமான, சத்தான உணவு அளிக்கப்படுகிறதா; அவர்களின் மருத்துவ தேவை, பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் வசதி, பொழுதுபோக்கு வசதி, ஆன்மிக விஷயங்களை, அரசு கண்காணிக்க வேண்டும்.குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத இல்லங்களின் பதிவை, ரத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு முதியோர் இல்லங்களும், பதிவு செய்யப்பட வேண்டும். அதில் உள்ள முதியோரின் விபரங்களையும், நிர்வாகத்தில் உள்ளவர்களின் விபரங்களையும் அரசு பராமரிக்க வேண்டும். பதிவு செய்யப்படாத இல்லங்கள், தொடர்ந்து இயங்க அனுமதிக்கக் கூடாது.சமூக நலத் துறை உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் நேரத்தில், மூத்த குடிமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக, பிரிவு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.முதியோர் நலனில் அக்கறை; சமூக பாதுகாப்பு தொடர்பாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இயற்றப்பட்ட சட்ட விபரங்களை, மத்திய – மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், நீதிபதிகள் அறிவுறுத்தினர்.