அதிமுக பொது குழு நடத்த தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம் கருத்து..!!

அதிமுக பொதுக் குழுவை நடத்த தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து  தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்களை தவிர எதையும் நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி அதிமுகவின் இபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது இபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்
23 தீர்மானம் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு தவறானது. கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட்டது அதிகாரம் மீறிய செயல். மேலும். அந்த உத்தரவுக்கு எதிராக செயல்பட்டோம் என கூறி அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது என்று வாதம் முன்வைத்தார்.

அப்போது, ’23 மூன்று தீர்மானங்களை தவிர வேறு எதையும் நிறைவேற்ற கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கடந்த 23ம் தேதி அன்றைய தினம் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்ட அன்றே முடிந்துவிட்டது. இதில் மேற்கொண்டு விசாரிக்க என்ன இருக்கிறது?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக ஓ.பி.எஸ் தரப்பு தொடர்ந்த அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு கோரியது.

தற்போதைய சூழலில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது சென்னை உயர் நீதிமன்றத்தின் வரம்புக்குட்பட்ட விவகாரம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிப்படி கட்சியை வழிநடத்த ஒருஙகிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தான் அதிகாரம் உள்ளது. ஆனால் தற்போது அதை உடைத்தெறிந்து கட்சியை கைப்பற்ற முயற்சி எடுக்கிறார் இபிஎஸ்.

தற்போது உள்ள விதிமுறைகள்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். அதுதான் விதி முறை. ஆனால் அதனை மீறும் வகையில் அந்த இரண்டு பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒருவர் மட்டுமே கட்சியை கைப்பற்ற நினைக்கிறார் என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார்.

இது உங்கள் கட்சி விவகாரம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘இவ்விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. கட்சி தொடர்பான தீர்மானங்கள் கொண்டு வருவது உங்கள் கட்சி விஷயம். மேலும் கட்சி விவகாரத்தில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், எது நிறை வேற்றக்கூடாது என நீதிமன்றம் தலையிட்டு கூற வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்களுக்குள்ளான உறவு எவ்வாறானது என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்’ என்றனர்.

கட்சி சட்ட விதிமுறைக்கு மாறாகவோ, மீறியோ எவரேனும் நடந்தால் நீதிமன்றம் தலையிட முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.

கட்சி உள்விவகாரங்களிலும் பொதுக்குழு எப்படி செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் நீதிமன்றம் தலையிட வேண்டும் என நினைக்கிறீர்களா? என நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்ப, அதற்கு கட்சியின் உள் விவகாரங்கள் சட்ட விதிமுறைகளுக்கு மீறி செயல்படும் பட்சத்தில் நீதிமன்றங்கள் தலையிடலாம் என்றும் 23 தீர்மானங்களை தவிர வேறு எதையும் நிறைவேற்றக் கூடாது என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பித்தது. அதை மீறி அவர்கள் செயல்பட்டுள்ளார் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானங்கள் நிராகக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு? என்று நீதிபதிகள் கேட்டனர்.

தீர்மானத்தை தாண்டி சில நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவை நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் , எனவே அது அவமதிப்பு தான் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

கட்சி தொடர்பான அடிப்படை விவகாரங்கள் எல்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் உள்ளது, எனவே அந்த விவகாரங்களில் உயர்நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

வரும் பொதுக்குழு உள்ளிட்ட பிற விவகாரங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது. 11ம் தேதி பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவமதிப்பு வழக்குக்கும் தடை விதிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்துள்ளது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு செவிமடுக்க மறுத்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.