ரயிலில் கார்களை ஏற்றி செல்வதில் 8 ஆண்டுகளில் பத்து மடங்கு வளர்ச்சியை பதிவு செய்த இந்திய ரயில்வே..!

ந்திய இரயில்வேயில் வாகன போக்குவரத்து சமீப காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. ஆட்டோமொபைல் வாகனங்களை அதிக அளவில் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல், அதனால் ஏற்படக்கூடிய கார்பன் உமிழ்வின் அளவை குறைத்து ஆட்டோமொபைல் துறைக்கு இந்திய ரயில்வே உதவி வருகிறது.

ரயில்கள் மூலம் கார்களை ஏற்றிச் செல்லும் அளவு கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. இது தனியாருக்கு சிறப்பு ரயில் பெட்டிகள் போன்ற பல்வேறு புதிய நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.

இதற்காக, ஆட்டோமொபைல் துறையினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு, வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆட்டோ மொபைல் துறையினரின் தேவைக்கேற்ப ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2019 – 20ல் 1599 ரயில் பெட்டிகளில் கார் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது 2020-21ல் 2681 ஆக உயர்ந்து, தற்போது 2022-23 நிதியாண்டில் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளேயே 2206 என்ற அளவை எட்டி விட்டது.

கடந்த 2021 – 22ல் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 320 ரயில் பெட்டிகள் என்ற அளவு, 2022 ஆகஸ்ட் மாதத்தில் 508 பெட்டிகளாக உயர்ந்துள்ளது. கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் உள்நாட்டு ரயில் போக்குவரத்து மூலம் கார்களை ஏற்றிச் செல்லும் அளவு 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரயில்வே மூலம் கார்கள் போக்குவரத்து அளவு 68% அதிகரித்துள்ளது. இவை கார்களின் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகள் மட்டுமே. இரு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களின் உள்நாட்டு போக்குவரத்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.