பலூன்ல இருக்கிற காற்று மாதிரிதான்… திமுக வாக்குறுதியும் புஸ் .. சொன்னது குஷ்…

டெல்லி: அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அம்பேத்கரும், மோடியும் என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார்.

அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் ராகுல் காந்தியின் பாத யாத்திரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை திட்டத்தால் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மலரும் என கூறுகிறார்கள்.

எங்கிருந்து ஆட்சி மலரும்? காங்கிரஸில் இருக்கும் முக்கியமான தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறார்கள். யாத்திரையின் போது அவர் யாருடன் உட்கார்ந்து பேசுகிறார் என்பதை பார்த்தீர்களா? பாத யாத்திரைக்கான வரைப்படத்தை பாருங்கள். இந்த பயணத் திட்டம் முட்டாள்தனமாக இருப்பதாக அவரது கட்சியினரே விமர்சிக்கிறார்கள்.

இந்த பயணத்திட்டமே ராகுலின் வசதிக்காக செய்தது போல் தெரிகிறது. பாதயாத்திரையை எப்படி நடத்த வேண்டும். எங்கெல்லாம் தேர்தல் வர போகிறதோ எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் நடத்த வேண்டும். ஆனால் ராகுலோ 18 நாட்கள் கேரளாவில் பாதயாத்திரை போய் என்ன செய்ய போகிறார்?

நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பேசுபவர்களுடன் உட்கார்ந்து பேசுகிறார் ராகுல். ராகுல் காந்தியை பொருத்தமட்டில் அவருக்கு கட்சி பொறுப்பு வேண்டாம். தலைமை பதவியும் ஏற்க மறுப்பார், ஆனால் அனைவரும் அவருக்கு தலைமை பதவிக்கான மரியாதையை கொடுத்துவிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

ஒன்றும் இல்லை ராகுல் காந்தியின் பெயருக்கு பின்னால் இருக்கும் காந்தியை எடுத்துவிட்டால், அவர் வெறும் வயநாடு தொகுதி எம்பிதான். காங்கிரஸ் கட்சி எல்லாவற்றையும் இழந்துவிட்டது. இனி வளர வாய்ப்பில்லை, ஜனநாயக ரீதியில் நமக்கு நல்ல எதிர்க்கட்சி வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தலைமை இருக்கும் வரை அத்தகைய எதிர்க்கட்சி வரவே வராது. கரை சேர்க்க முடியாத காங்கிரஸ் கட்சியை ராகுல் கரை சேர்க்க முயற்சிக்கிறார். பலூன்ல இருக்கிற காற்று மாதிரிதான் ஊசியால் குத்தினால் புஸ்ஸென ஆகிவிடும். அது போல் திமுக வாக்குறுதிகளும் புஸ்தான் என குஷ்பு தெரிவித்திருந்தார்.