உலகின் 4-வது கோடீஸ்வரர் ஆனார் கவுதம் அதானி: ஓரே ஆண்டில் இரு மடங்கு சொத்து அதிகரிப்பு..!!

உலகின் 4-வது கோடீஸ்வரர் என்ற பெருமையை இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி பெற்றுள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த வாரம் தனது சொத்தில் 2000 கோடி டாலர்களை அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாகத் தெரிவித்தத்தைத் தொடர்ந்து அதானி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

2021-ம் ஆண்டிலிருந்து கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இரு மடங்காக அதிகரித்து தற்போது 11200 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கட்டுமான நிறுவனம், எரிசக்தி, க்ரீன் எனர்ஜி, எரிவாயு, துறைமுகம், உள்ளிட்ட பல்வேறு துறைகளை கவுதம் அதானி கையில் வைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சக கோடீஸ்வரர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியை முறியடித்த அதானி, ஆசியாவில் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெற்றார். அப்போது உலகளவில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் அதானி இருந்தார், அவரிடம் 9010 கோடி டாலர் சொத்து இருந்தது.

கவுதம் அதானி, பில்கேட்ஸ் இருவருமே கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்தான் இன்று கோடீஸ்வரர்களாக வலம் வருகிறார்கள். அதானி முதல்முறையாக கடந்த 2008ம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிகையில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றார். அப்போது அதானியிடம் 930 கோடி டாலர் இருந்தது.

சமீபத்தில் கவுதம் அதானி தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவரின் குடும்பத்தினர், 707 கோடி டாலர் மதிப்புக்கு சமூகப் பணிகளை அதானி பெயரில் செய்ய இருப்பதாக அறிவித்தனர்.

ஆனால், பில்கேட்ஸ் கடந்த 1990களில் இருந்து தொடர்ந்து 13 ஆண்டுகளாக உலகின் முதல் கோடீஸ்வரர் என்ற பெயருடன்இருந்து வந்தார். கடந்த 1995ம் ஆண்டு முதலிடத்துக்கு பில்கேட்ஸ் செல்லும்போது, அவரின் சொத்து மதிப்பு 1250 கோடி டாலர் இருந்தது. 2008ம் ஆண்டுவரை பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தநிலையில் அந்த இடத்தை தற்காலிகமாக வாரன் பபெட் நிரப்பினார்.

2009ம் ஆண்டு மீண்டும் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்தார். 2010 முதல் 2013 வரை பில்கேட்ஸ் முதலிடத்தில்இருந்தார். 2014ம்ஆண்டில் மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதலிடத்தை வைத்திருந்தார். அதன்பின் ஜெப் பிஜோஸ் இடம் பெற்றார்.

கடந்த பல ஆண்டுகளாக தனது கேட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்டஉதவிகள் செய்து வரும் பில்கேட்ஸ், பெரும்பாலான மைக்ரோசாப்ட் பங்குகளை விற்றுவிட்டார். கேட்ஸ் அறக்கட்டளைக்கு 1000 கோடி டாலர்களை பில்கேட்ஸ் வழங்கியுள்ளார்..