மதுரையில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

மதுரை அம்பிகா தியேட்டர் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் தேவையற்ற வேளாண் உபகரணங்கள் டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிடுதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மதுரை மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்,தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 2.500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமை வகித்தார்.ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் உதயகுமார் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கங்களின் தவணைத் தவறிய நகைகளை ஏலமிட்ட வகையில் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையினை நட்ட கணக்கிற்கு கொண்டு செல்லும் வகையில் நிபந்தனைகளை தளர்த்தி புதிய உத்தரவு பிறபிக்கப்பட வேண்டும். சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்பிட வேண்டும்.
பயிர் கடன் தள்ளுபடியில் விதிமீறல் எனக்கூறி செயலாளர்களின் பணி ஓய்வு காலத்தில் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 12/10/2023 அன்று மாநிலம் முழுவதும் சுமார் 40,000 பணியாளர்கள் 7 மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டு சிறை நிரப்பும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என நிர்வாகிகள் கூறினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட செயலாளர் கணேசன், தேனி மாவட்ட தலைவர் அருணகிரி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் யோகசரவணன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் மதுரை திருச்சிற்றம்பலம், சிவகங்கை பிரிட்டோ, ராமநாதபுரம் முத்துராமலிங்கம், புதுக்கோட்டை நெடுமாறன், திண்டுக்கல் சுப்பையா, தேனி முருகன் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மதுரை மாவட்ட பொருளாளர் பாரூக் அலி நன்றி கூறினார்.