இந்தியா கூட்டணியில் சிபிஎம், சிபிஐ-க்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு.!!

தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான 3-ம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.இதில் ராமநாதபுரம் தொகுதி ஐயுஎம்எல் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொமதேக கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று தொகுதி பங்கீடு குறித்த 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொண்டது. இதில் திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டு, கையெழுத்தானது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.அதேபோல் திமுக – மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்பட்டது. இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தங்களுடைய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் எந்த தொகுதியில் போட்டி என்பது முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கோவை, மதுரை ஆகிய தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.