மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி;ஊதியம் ரூ.5,000-7,500 வழங்க முடிவு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதலைமைச்சர் ஸ்டாலின்  விளக்கம் அளித்து வந்தார்.அப்போது முதல்வர் கூறுகையில்:

“மாநிலத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள வேலை உறுதித்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணிக்கு விருப்பம் தெரிவிக்க கூடிய முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணி வழங்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பு ஊதியம் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மக்கள் நலப்பணியாளர்கள் ஏற்கனவே கிராம ஊராட்சி பணிகளில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கிராம ஊராட்சி பணிகளை கூடுதலாக கவனித்து கொள்ள வாய்ப்பளித்து அதற்கென மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து மாதம் ரூ.2500 வழங்கி ஒட்டுமொத்த மதிப்பு ஊதியமாக ரூ.7500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.