அரிசி மீது ஏற்றுமதி வரி 20 சதவீதமாக அதிகரிப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசு அரிசி ஏற்றுமதியை குறைக்கும் விதமாக 20 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த வரி விதிப்பு மூலம் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை அதிகரித்துவிடும், இதனால் பிற நாடுகளுக்கான ஏற்றுமதி குறையும்.

அரிசி மீதான வரி விதிப்பு குறித்து இந்த வாரத்தின் துவக்கத்திலேயே மத்திய அரசு ஆலோசனை செய்து வந்த நிலையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதி மாலை மத்திய அரசு வெளியிடப்பட்ட அறிவிப்பு மூலம் வரி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது, இந்த அறிக்கையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை அரசு விதித்துள்ளது.

இந்திய மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்த ஒரு மாதத்திற்குப் பிறகு 20 சதவீத வரி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எல் நினோவின் அச்சத்தாலும், இந்தியாவில் பதிவான மோசமான நிலையற்ற மழை காரணமாக ஏற்கனவே விவசாய உற்பத்தி கடுமையாக பாதித்துள்ள நிலையில் உள்நாட்டு சந்தையில் அரிசி-க்கான விநியோகத்தை பாதிக்கும் என கணிப்பை அடுத்து ஏற்றுமதிக்கான தடை மற்றும் 20 சதவீத வரி ஆகியவற்றை மத்திய அரசு விதித்து வருகிறது.

சர்வதேச அளவில் புழுங்கல் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமானது. 2022 ஆம் ஆண்டில் அரிசியின் மொத்த ஏற்றுமதியில் புழுங்கல் அரிசியின் ஏற்றுமதி மட்டும் 7.4 மில்லியன் டன்களாக உள்ளது.

இந்தியாவில் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இதன் தாக்கம் சில்லறை பணவீக்கத்தில் அதிகளவில் எதிரொலிக்கும் வேளையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான மத்திய அரசின் தடை குறைந்தது நவம்பர் மாதம் வரையில் தொடரலாம் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய நாடாக இருக்கும் வேளையில், இந்த தடையும், வரி விதிப்பும் பெரிய பாதிப்பை உலகளவில் ஏற்படுத்தும். சீனாவில் மழை வெள்ளம் காரணமாக அந்நாட்டின் அரிசி உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது, இதனால் ஓட்டுமொத்த தென்கிழக்கு நாடுகளிலும் அரிசி விலை உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் அரிசி விலை ஏற்கனவே 11 வருட உச்சத்தில் இருக்கும் வேளையில் இந்த தடை மற்றும் வரி விதிப்பு உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் மாதம் முதல் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளது.