சினிமா பட பாணியில்… BPO நிறுவனத்தில் ரகசிய ஆப்பரேஷன்… ஊழியர்களாகவே மாறிய 7 பெண் போலீசார்…

காராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பிபிஓ நிறுவனத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளன.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் கர்னிக் தலைமையிலான ‘ஸ்பெஷல் 7’ குழுவினர் சினிமா பாணியில் அதிரடி ஆப்பரேஷன் ஒன்றை நடத்தினர்.

ஏழு பெண் போலீஸ் அதிகாரிகள், அந்த நிறுவனத்தில் சாதாரண ஊழியர்களாகச் சேர்ந்து சுமார் 40 நாட்கள் ரகசியமாகப் புலனாய்வு செய்தனர். ஊழியர்களுடன் ஒன்றாக அமர்ந்து வேலை செய்தபடியே, அங்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் மதமாற்றத் தூண்டுதல்களை அவர்கள் ரகசியமாகப் படம் பிடித்து ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர்.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி ஒரு பெண் ஊழியர் அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் இதுவரை 8 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் முக்கியமானவர்கள் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது வெறும் பாலியல் குற்றமல்ல, இதன் பின்னணியில் வெளிநாட்டு நிதியுதவியுடன் கூடிய மதமாற்றச் சதி இருக்கலாம் என எஸ்.ஐ.டி போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட டிசிஎஸ் நிறுவனம், குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களை உடனடியாகப் பணியிலிருந்து நீக்கியுள்ளதுடன், உயர்மட்ட விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்குள் ரகசியமாக நடந்த இந்த ‘கறுப்பு ஆடுகளின்’ லீலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.