நள்ளிரவில் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் சென்ற ஆம்னி பஸ் கவிழந்து விபத்து- 34 பேர் படுகாயம்..

கோவை:கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று இரவு 9 மணியளவில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சில் 38 பயணிகள் இருந்தனர். ஆம்னி பஸ்சை டிரைவர் ஷியாம் மற்றும் கூடுதல் டிரைவர் ஆனந்த் ஆகியோர் ஓட்டி வந்தனர்.

பஸ் நள்ளிரவு 2.45 மணியளவில் கோவை சூலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எல்.அண்டு.டி பைபாஸ் ரோட்டில் வளைவில் திரும்பியது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் இடது புறத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. நள்ளிரவு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் பஸ் திடீரென கவிழ்ந்ததால் படுகாயம் அடைந்து அதிர்ச்சியடைந்து அலறல் சத்தம் போட்டனர்.இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பயணிகளை மீட்டனர்.

பின்னர் அவர்களை ஆம்புலன்சு மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பஸ்சின் டிரைவர்கள் உள்பட 34 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த தகவல் கிடைத்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்து காரணமாக அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை போலீசார் சரிசெய்தனர். மேலும் காயம் அடைந்த பயணிகளின் உடமைகளை மீட்டு பத்திரப்படுத்தி வைத்தனர்.இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.