சூலூரில் சாலையோரம் இருந்த பாட்டிலில் தண்ணீரை குடித்த பெண் உயிரிழப்பு..

கோவை கிணத்துகடவை சேர்ந்தவர் வசந்தி (வயது 36). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது சித்தி மஞ்சுளா (48) என்பவருடன் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பஸ் நிலையத்தில் விளம்பர நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மஞ்சுளாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் கிடைக்குமா என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். அங்கு ரோட்டோரோம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனை பார்த்த அவர் அதனை எடுத்து குடித்தார். பின்னர் தனது வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.

அவர் மஞ்சுளாவை அழைத்து கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் குடித்த நீரில் விஷத்தன்மை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அன்னூரை சேர்ந்தவர் நித்தியானந்தம் (30). டிரைவர். இவரது மனைவி கோகிலா (28). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
நித்தியானந்தத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கோகிலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்கு தனது தாய் வீட்டுக்கு சென்றார். அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு செல்ல மறுத்தார். இதனால் நித்தியானந்தம் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.