நாகப்பட்டினத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை, கடல் குதிரைகள் பறிமுதல்.!!

நாகப்பட்டினத்தில் இருந்து கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள், கடல் குதிரைகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் நாகை அக்கரைபேட்டை மாரியம்மன்கோயிலுக்கு தென்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட 812 கிலோ கடல் அட்டைகள், 248 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், பதப்படுத்தப்பட்ட 15 கிலோ எடையுடைய சுறா மீனின் இறக்கைகள், பதப்படுத்தப்பட்ட 4 கிலோ கடல் குதிரை ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். மேலும் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட உபகரணங்களான அடுப்பு-1, சிலிண்டர்-2, எடைபோடும் தராசு-1, பிளாஸ்டிக் ஐஸ் பெட்டிகள்-34 ஆகியவை இருப்பது தெரியவந்தது. இவற்றை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை மேற்கொண்டனர்.

இதில் நாகை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம்(51) என்பவர் பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பதும், கடலோர காவல் குழும போலீசார் வந்தவுடன் தப்பி சென்றதும் தெரியவந்தது. தப்பியோடிய முருகானந்த்தை தேடி வருகின்றனர். கைப்பற்றிய பொருட்களை பறிமுதல் செய்து நாகை வனசரக அலுவலத்தில் கடலோர காவல் குழும போலீசார் ஒப்படைத்தனர்.