கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழக பெண் உள்பட 2 பேரின் உடலில் முக்கிய உறுப்புகள் மாயம் – மனித மாமிசம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை-ஷாக் தகவல்..

திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடலிலும் முக்கிய உறுப்புகள் இல்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே மனித மாமிசத்தை பெங்களூர் மந்திரவாதிகளுக்கு ரூ.20 லட்சத்துக்கு விற்று விடலாம் என்று பகவல்சிங், லைலா தம்பதியை ஷாபி நம்ப வைத்து ஏமாற்றிய தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடந்த நரபலி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகிய 3 பேரும் தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணையில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்ட பகவல் சிங்கின் வீட்டுக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு வேறு ஏதேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி பரிசோதனையும் நடந்தது.

முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்திற்கிடமான வகையிலான எந்த தடயமும் போலீசுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் மாமிசத்தை குக்கரில் வேக வைத்து சாப்பிட்டது தெரியவந்தது. அதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து மாமிசத்தை வேக வைக்க பயன்படுத்திய குக்கர், பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். உடல்களை துண்டுகளாக்கிய பின்னர் சில முக்கிய பாகங்களை பிரிட்ஜில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஷாபியிடம் விசாரித்தபோது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் போலீசுக்கு கிடைத்தன.

செல்வம் சேர சிறப்பு பூஜை நடத்துவதாக கூறி ஷாபி பல தவணைகளாக பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரிடம் ரூ.6 லட்சம் வரை பணம் வாங்கியிருந்தார். அதை 2 பேரும் திருப்பிக் கேட்ட போது தான் நரபலி கொடுத்து மாமிசத்தை விற்பனை செய்தால் பல லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று நம்ப வைத்து உள்ளார்.

பெங்களூருவில் ஒரு மந்திரவாதி இருப்பதாகவும், அவரது ஆட்களுக்கு மனித மாமிசத்தை விற்பனை செய்தால் ரூ.20 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்றும் கூறி உள்ளார். அதை பகவல் சிங்கும், லைலாவும் நம்பி உள்ளனர். ஆனால் ரோஸ்லியை நரபலி கொடுத்த பிறகும் மாமிசத்தை வாங்க யாரும் வரவில்லை.

அது குறித்து கேட்டபோது, நல்ல நேரத்தில் நரபலி கொடுக்கவில்லை என்றும், அடுத்து ஒரு பெண்ணை நல்ல நேரத்தில் நரபலி கொடுத்தால் கண்டிப்பாக கூடுதல் விலைக்கு மாமிசத்தை வாங்க ஆட்கள் வருவார்கள் என்றும் கூறி உள்ளார். அதையும் பகவல் சிங்கும், லைலாவும் நம்பினர்.

அதன் பிறகுதான் பத்மாவை நரபலி கொடுத்து உள்ளனர். மேலும் நரபலி கொடுத்த பின்னர் பகவல் சிங்கையும், லைலாவையும் மிரட்டி பணம் பறிக்கவும் ஷாபி திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையே 2 பேர் உடலிலும் இதயம், சிறுநீரகம் உள்பட முக்கிய உறுப்புகள் இல்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கசாப்பு கடையில் வேலை செய்த அனுபவம்; பெண்ணை உயிருடனே துண்டு துண்டாக்கிய கொடூரம்: பத்மாவையும், ரோஸ்லியையும் நரபலி கொடுத்த பின்னர் 3 பேரும் சேர்ந்து உடல்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்தனர். பத்மாவின் உடலை 56 துண்டுகளாகவும், ரோஸ்லியின் உடலை 5 துண்டுகளாகவும் வெட்டி பின்னர் குழி தோண்டி புதைத்தனர். இவர்களில் ஒருவரை முதலில் கழுத்தை நெரித்துக் கொன்று உடலை பல துண்டுகளாக்கினர். ஆனால் இன்னொரு பெண்ணை உயிருடனேயே துடிக்கத் துடிக்க துண்டு துண்டாக வெட்டியது விசாரணையில் தெரியவந்து உள்ளது. ஷாபி இதற்கு முன்பு ஒரு இறைச்சி கடையில் பணிபுரிந்து உள்ளார். மேலும் எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்த 2 இடங்களில் பணிபுரிந்த அனுபவம் தான் உடல்களை எளிதில் வெட்டி துண்டுகளாக்குவதற்கு ஷாபிக்கு கை கொடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.