கோவையில் மீன் விலை கடும் உயர்வு-வஞ்சிரம் கிலோ ரூ.900 க்கு விற்பனை..!!

கோவை உக்கடம் லாரிபேட்டையில் மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தில் தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டுக்கு வருகிறது.
இங்கு மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கிச்செல்கின்றனர். வார நாட்களை விட வார இறுதி நாட்களில் இந்த மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும். மீனுக்கென அசைவப்பிரியர்கள் கோவையில் அதிகம் உள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் மீன் பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கினர். இதனால் மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உக்கடத்திற்கு வரும் மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் கடல் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இருந்த போதும் கேரளாவில் இருந்து டேம் மீன்கள் உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும் கடல் மீன் பிரியர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, கோவை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் கடல் மீன்கள் விலை வஞ்சிரம் ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்லா ரூ.120-க்கும், ரோகு ரூ.120-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், சிறிய நெத்திலி ரூ.100-க்கும், மத்தி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டேம் மின்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. மீன்கள் விலை அடுத்த இரண்டு வாரங்களில் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.