தமிழகத்தில் ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி..!!

தமிழகத்தில் காற்று சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திதுறை முக்கிய பங்கு வகிக்கின்றன.
தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15-ந் தேதி காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் தொ டங்கியுள்ளது. காற்று சீசன் தொடங்கியுள்ள காரணத்தால் தினமும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:
காற்று சீசன் தமிழகத்தில் தொடங்கியுள்ள காரணத்தால் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து வருகிறது. ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் இன்று வரை ஒரே நாளில் அதிக மின்சாரம் 4-ந் தேதி உற்பத்தி செய்யப்பட்டது.
ஜூலை 3-ந் தேதி ஒரே நாளில் 10.4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தின் தினசரி மின் தேவையில் காற்றாலைகள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்க தொடங்கியுள்ளன.
ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழ்நாடு மின்வாரியம் பெற்று கொள்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினார்.