கோவையில் வீட்டு கியாஸ் சிலிண்டரை வணிகப்பயன்பாட்டு சிலிண்டா்களில் அடைத்து விற்பனை: 2 பேர் கைது-117 சிலிண்டர்கள் பறிமுதல்

கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் அா்ஜுன்குமாா், கோவை பறக்கும் படை துணை வட்டாட்சியா் முத்துமாணிக்கம் ஆகியோா் கொண்ட குழுவினா் மாநகரப் பகுதிகளில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர், வணிகப் பயன்பாட்டுக்காக மாற்றி பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக சோதனை மேற்கொண்டனா்.

அப்போது குரும்பபாளையம் காளப்பட்டி ரோடு, குறிஞ்சி நகரில் உள்ள ஒரு கொட்டகையில் சோதனை மேற்கொன்டனர். அங்கு 2 பேர், வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து, நவீன கருவியைப் பயன்படுத்தி, வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களில் கியாசை நிரப்பி கொண்டு இருந்தனா். அவர்களை போலீசார் சுற்றி வலைத்து பிடித்தனர்.விசாரணையில் அவா்கள், குரும்பபாளையம் திருச்செந்தூா் காா்டன் பகுதியைச் சோ்ந்த ராஜா (வயது 40), கீரணத்தம், குறிஞ்சி நகரைச் சோ்ந்த ஜோஸ்வா டேனியல் (25) என்பது தெரியவந்தது.

தனியாா் சமையல் சிலிண்டர் ஏஜென்சியில் விற்பனையாளா்களாக வேலை செய்து வரும் இவா்கள், அவசரத்துக்கு கியாஸ் சிலிண்டர் கேட்பவா்களுக்கு, கூடுதல் பணம் பெற்றுக்கொண்டு, வீட்டு உபயோக சிலிண்டர்களில் இருந்து, கியாசை எடுத்து வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களில் அடைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீசார், அவா்களிடம் இருந்து 117 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.