கோவையில் தூய்மைப்பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்- தேங்கி நிற்கும் குப்பைகளால் துர்நாற்றம்..!

கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் கலெக்டர் சமீரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 4-ந் முதல் மீண்டும் பணிக்கு சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று கோவை மாநகராட்சியின் கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

இதனை அடுத்து தீபாவளி முடிந்த அடுத்த நாள் நேற்று முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர்.
இதனை அடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2-வது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இன்று காலை கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடி முற்றுகையில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பட்டாசு வெடித்த குப்பைகளும் குவிந்து கிடக்கிறது.