கோவையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகையுடன் வடமாநில தொழிலாளி தப்பி ஓட்டம் – போலீசார் வலை..!

கோவை பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி. 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் ( வயது 38) இவர் தெலுங்கு வீதியில் நகைபட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கார்த்திக் என்ற ராஜ ருகிதாஸ் (வயது 34) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் நகை பட்டறை அருகே அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் ராஜசேகர் 18ஆம் தேதி 538 கிராம் எடையுள்ள 27 தங்க செயின்களை கார்த்திக்கிடம் கொடுத்து புதிய டிசைன்களாக செய்து மறுநாள் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .அதற்கு அவரும் ஒரே நாளில் இந்த வேலையை செய்துமுடித்து விடுவதாக கூறினார். இதற்கிடையே 19ஆம் தேதி காலையில் நகை பட்டறைக்குச் சென்ற ராஜசேகர் அங்கு தங்கி இருந்த கார்த்திகை தேடினார். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரிடம் பேன்சி டிசைனாக செய்ய கொடுத்த நகைகளையும் காணவில்லை. .உடனே அவர் கார்த்திக்கின் செல்போனில் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ரூ25 லட்சம் நகையுடன் கார்த்திக் என்ற ராஜ ருகிதாஸ் தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது. இது குறித்து பட்டறை அதிபர் ராஜ சேகர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தனசீலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் தலை மறைவான கார்த்திக் மேற்கு வங்காளத்தில் உள்ள அவருடைய உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. எனவே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மேற்கு வங்காளம் செல்ல உள்ளனர்.