கோவை மழைக்காலங்களில் மாநகரில் லங்கா கார்னர், காட்டூர் புரூக்பாண்ட்’ சாலை, அவிநாசி சாலை ரயில்வே மேம்பாலங்களின் கீழ்பகுதியில் மழைநீர் குளம்போல தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. சாதாரண வகை மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற காலதாமதமாகிறது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் விரும்பினால் தேவையான ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளதாக பம்ப்செட் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, “பாலங்களின் கீழ் தேங்கி நிற்கும் சேற்றுநீரை வெளியேற்ற ‘ஸ்லரி பம்ப்செட்’ உதவும். மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களில் முதலில் பம்ப்ஹவுஸ் எனப்படும் நிரந்தர பம்ப்செட் வைத்திருக்கும் கட்டமைப்பு அமைக்க வேண்டும். தவிர வெளியேற்றப்படும் நீரை உரிய முறையில் கொண்டு
செல்ல தேவையான கட்டமைப்பு அமைக்க வேண்டும். இது போன்ற செயல்களுக்கு பயன்படும் வகையில் பல நூறு குதிரை திறன் (எச்பி) கொண்ட பம்ப் செட்களை பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளோம்” என்றார்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்
கூறும்போது, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட தரமான பம்ப்செட்களை பல்வேறு உலக நாடுகளுக்கு கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன. கோவையில் ரயில்வே மேம்பாலங்களின்கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு உதவ தயாராக உள்ளோம் என்றார்.