நீதிபதிகள் மீது மோசமான குற்றச்சாட்டை சுமத்துவது ஃபேஷனாகிவிட்டது- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை.!!

உச்சநீதிமன்றத்தின் கோடை கால விடுமுறை அமர்வு பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது.

அந்த வகையில் இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதி டி.ஓய் சந்திரசுட்,பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் ஒருவர் குற்றவாளி என கண்டறியப்பட்டு 2 வார சிறை தண்டனையும், 1 ஆண்டு பயிற்சி செய்ய தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை விசாரித்தது. அப்போது நீதிபதிகள்,

வழக்கறிஞர் (மனுதாரர்) எதிராக பிடிவாரண்டு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பி.டி.ஆஷா மற்றும் மற்றொரு நீதிபதியையும் பதவியில் இருந்து திரும்ப பெற மனு தாரர் கோரும் செயலை உச்சநீதிமன்றம் மோசமாக பார்க்கிறது. நீதி நியவாகத்தின் மீது மரியாதை இல்லாதது போல மனுதாரரின் செயல் உள்ளதாக விமர்சித்த நீதிபதிகள், இந்த மனு தாரரை ( வழக்கறிஞரை ) திருத்த முடியாது எனவும் வழக்கறிஞர் தொழிலுக்கு இவர் ஒரு கறை என நீதிபதி சந்திரசுட் தெரிவித்தார்.

இப்போதைய சூழலில் நீதிபதிகள் மீது மோசமான குற்றச்சாட்டை முன்வைப்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது என்றும், இது போன்ற செயல் உத்தரபிரதேசம், மும்பை ( பம்பாய் ) நீதிமன்றம் மற்றும் சென்னையில் பரவலாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும், நீதிபதிகள் மீது உடல் ரீதியான தாக்குதல் நடப்பதும் தங்களுக்கு கவலை அளிப்பதாக கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாவட்ட நீதித்துறையில் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனை குறைந்த பட்சமே என கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.