கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 22 பேருக்கு அபராதம்..!

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்கள் வைத்துள்ளனரா? என சோதனை நடத்தி, உரிய ஆவணம் இல்லை என்றால் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோத்தகிரி பகுதிகளில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா? ஹெல்மெட் அணிந்துள்ளனரா? எனவும் சோதனை நடத்தினர். சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய 22 வாகன ஓட்டிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதிக பட்சமாக அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு 30000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இரண்டாவது முறை இதே போன்று விதிகளை மீறினால் அபராத தொகை பன்மடங்கு போடப்படும் எனவும், போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தார்.