கோவையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்து பல பேரிடம் பணத்தை அபேஸ் செய்த மோசடி மன்னன் கைது..!

திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவா் முஹமது அலமின் (53). இவர் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் ஒருவரிடம் தன்னை ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக்கூறி ரூ.50 ஆயிரம் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் முஹமது அலமினை கோவை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். இது குறித்து கோவை சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர் அருண் கூறியதாவது: திருப்பூரைச் சேர்ந்த முஹம்மது அலமின் சென்னையில் உயர்நீதிமன்ற நீதிபதி போல நடித்து பணம் மோசடி செய்த வழக்கில் அண்மையில் சிறை சென்று வந்துள்ளார். தற்போது, கோவையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கெனவே, சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றார்..