கோவையில் இந்த மாதம் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும்- சுகாதாரத் துறை தகவல்..!

கோவை:
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த இரண்டு தவணை செலுத்திக் கொண்டால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்ததால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 18 முதல் 59 வயதுக்கு உள்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதையடுத்து, தமிழகத்தில் 18 முதல் 59 வயதுக்கு உள்பட்டவர்களுக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜூலை 15 முதல் அடுத்த 75 நாள்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இந்நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 29 லட்சத்து 12 ஆயிரத்து 580 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 26 லட்சத்து 70 ஆயிரத்து 84 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை 2 லட்சத்து 49 ஆயிரத்து 107 பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது பூஸ்டர் தடுப்பூசியை மிகவும் சொற்பமான நபர்களே செலுத்திக் கொண்டுள்ளனர். செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்பதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளதாவர்கள் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.