கோவையில் கொல்லப்பட்ட கோகுலின் தம்பி மீது தாக்குதல்- போலீஸ் விசாரணை..!

கோவை கோர்ட்டு அருகே கடந்த 13-ந் தேதி கோவில் பாளையம் அடுத்த கொண்டையம் பாளையத்தை சேர்ந்த கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் 11 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோகுலின் சகோதரர் பிரதீப்(வயது20). இவர் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது தெருவில் நின்று கொண்ட அவர், அந்த வழியாக நடந்து சென்றவர்கள் மற்றும் அங்குள்ள பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்தவர்களிடம் எனது அண்ணனே செத்து விட்டான். நீங்கள் எல்லாம் எதற்காக உயிரோடு இருக்கிறீர்கள். நீங்களும் சாகுங்கள் என பேசியவாறு சுற்றி திரிந்தார்.

இந்த நிலையில் அந்த வழியாக வாலிபர்கள் சிலர் வந்தனர். அவர்களிடம் பிரதீப் தகராறில் ஈடுபட்டு, அவர்களை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், தங்கள் நண்பர்களை அழைத்து வந்து பிரதீப்பை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து, கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிரதீப்பை வாலிபர்களிடம் இருந்து மீட்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, பிரதீப், வாலிபர்களை கத்தியை காட்டி மிரட்டியதும், அதனால் அவர்கள் தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரதீப்பை கைது செய்தனர்.