கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே நேற்றிரவு 11 மணி அளவில் ரயிலில் அடிபட்டு கணவன்- மனைவி இருவர் அதே இடத்தில் இறந்து கிடந்தனர்.இதுகுறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் கணபதி, நல்லாம்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன்(வயது 44)அவரது மனைவி லதா (வயது 40 )என்பது தெரியவந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.கணவன்- மனைவி இருவரும் கடந்த ஒரு வாரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்களாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து ஜோடியாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா ?அல்லது தண்டவாளத்தைக் கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு செத்தார்களா? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன், மனைவி இருவரும் ஜோடியாக ரெயில் அடிபட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply