கோவையில் கருவேப்பிலை மூட்டையில் பதுக்கி வைத்திருந்த 132 மதுபாட்டில்கள் பறிமுதல்..!

மேட்டுப்பாளையம் அருகே காரமடை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மலை அடிவார பகுதிகளில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கணுவாய்பாளையம் தண்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 45) என்பவர் மோட்டார் சைக்கிளில் கருவேப்பிலை வைத்து ஒரு மூட்டையில் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னாள் கணுவாய்ப்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் அமர்ந்திருந்தார். அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் நடத்திய சோதனையில் கருவேப்பிலை மூட்டையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 132 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 132 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்..