திருமணமான 13 நாட்களில் புதுபெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி..

கோவை மதுக்கரை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மன் என்பவரது மகள் முத்துமாரி என்கிற கிறிஸ்டியான ஏஞ்சல் (வயது 25) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கிறிஸ்டியான ஏஞ்சல் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தனக்கு சரியாக சமைக்க தெரியாததாலும், கணவர் வீடு புதிய இடமாக இருந்ததாலும் மன குழப்பத்துடன் இருந்து வந்தார்.
மேலும் கடந்த சில நாட்களாக கணவரிடம தனது பெற்றோர் வீட்டுக்கு செல்ல வேண்டுமென கூறி வந்ததாக தெரிகிறது. பின்னர் கிறிஸ்டியான ஏஞ்சல் தனது அண்ணனுக்கு போன் செய்து தனது கஷ்டங்களை கூறியுள்ளார்.

அப்போது அவர் அறிவுரை கூறி சமாதானம் செய்துள்ளார். தான் விரைவில் வீட்டிற்கு வந்து அவரை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். தீ உடல் முழுவதும் மளமளவென பரவியது. இதனால் அவர் வலியால் அலறல் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் கிறிஸ்டியான ஏஞ்சலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 13 நாட்களில் புது பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.