கோவை கலெக்டர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளில் தேவையான இடங்களில் மின்னும் ஒட்டுவில்லைகள், வேகத்தடை, பாதசாரிகள் நடைபாதை கோடு, எச்சரிக்கைப் பலகைகள் ஆகியவை அமைக்க வேண்டும்.
போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் சரியான முறையில் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் கூட்டங்களில் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் இயக்கப்படும் வாகனங்களால் தான் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை உணர்ந்து வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தவிர இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது ஹெல்மெட், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட்டும் கட்டாயம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாநகரக் போலீஸ் துணை கமிஷனர்கள் அசோக்குமார், மதிவாணன், உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியா ஆனந்த், பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Leave a Reply