காரணமின்றி அபாயச் சங்கிலியை இழுத்தால் சிறை – சென்னை ரயில்வே கோட்ட நிர்வாகம் எச்சரிக்கை.!

சென்னை: ஹைதராபாத் டெக்கான் விரைவு ரயில் நேற்று காலை சூலூர்பேட்டை- அக்கம்பேட்டை இடையே வந்தபோது, ஒரு பயணி அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தார்.

இதனால் அந்த ரயில் கலிங்க ஆற்றுப் பாலத்தின் மீது நின்றது.

ரயிலின் குறிப்பிட்ட பெட்டியில் ஏற்பட்ட காற்று அடைப்பை சரிசெய்ய முடிவு செய்தனர். ஆனால், ரயில்வே ஊழியர்களால் அங்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, அங்கிருந்த பொக்லைன் உதவியுடன், ஆர்.பி.எஃப். காவலர் ராகுல் பாலத்தின் மீது நின்ற ரயில் பெட்டிக்குள் நுழைந்து, ஏர் லாக்கை சரிசெய்தார்.

ரயில்வே பாதுகாப்பு படையினரின் சமயோசித செயலால், தாமதம் தவிர்க்கப்பட்டு, ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில், தேவையின்றி அபாயச் சங்கிலியை இழுக்க வேண்டாம் என்று ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: அபாயச் சங்கிலியை தவறாகப் பயன்படுத்துவது , ரயில்வே விதிகளின்படி குற்றச் செயலாகும். அப்படிப்பட்ட நிலையில், அவசரத் தேவை இல்லாமல் ரயிலில் அபாயச் சங்கிலி இழுத்தால், ரயில்வே சட்டத்தின் 141-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விதியின் கீழ், எந்த ஒரு நியாயமான மற்றும் போதுமான காரணமின்றி, ஒரு பயணி அபாயச் சங்கிலியைப் பயன்படுத்தினால், அவருக்கு ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இவ்வாறு சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறினர்.