பெண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 6 மாதம் சம்பளத்துடன் விடுமுறை.!!

டெல்லி: தமிழ்நாட்டில் ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 26 வார (6 மாதம்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உறுதியை தமிழ்நாடு அரசு தந்திருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

மகப்பேறு விடுப்பு அரசாணை என்ன? 2017க்கு பின், இந்திய மகப்பேறு சலுகை சட்டத்தின்படி, பெண்களுக்கு 26 வாரம்/6 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை கண்டிப்பாக வழங்க வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் ஒரு பெண் கர்ப்பமுறும் சமயத்தில் 12 வாரங்கள்/மூன்று மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கண்டிப்பாக அளிக்க வேண்டும். இது அனைத்து தனியார் ஊழியர்களுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரை, 12 மாதங்கள் (365 நாட்கள்) மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2018ல் வெளியான அரசாணைப்படி, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகளைப் பெற்று இரண்டாவது முறை மகப்பேறு விடுப்பு கோருபவர்களுக்கு சட்டப்படி விடுமுறை வழங்க வேண்டும். இதுதான் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.

அரசு நிறுவனங்களில் இவை சரியாக கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் தனியார் நிறுவனங்களில் குறிப்பாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் பெண்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுவது இல்லை. பொதுவாக ஊழியர்கள் பணியில் சேரும் போது, ஒரு நிறுவனம், ஊழியர்களுக்கு வழங்கும் மகப்பேறு விடுமுறை, சலுகைகள் மற்றும் விதிமுறைகளைப் பற்றிய முழு விவரங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்று பல தனியார் நிறுவனங்களில், முதல் குழந்தைக்குக் கூட மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கு யோசிக்கின்றன.

அதேநேரம் தமிழ்நாட்டில், மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதுபற்றி தமிழக அரசிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முறையிட்ட நிலையில் , 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.