கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் நடத்தினால் வழக்கு… உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் நடத்தினால் வழக்கு பதிவு..உயர் நீதிமன்ற தீர்ப்பு … மகிழ்ச்சியில் கோவை நடன கலைஞர்கள்..

கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் நடத்தினால் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், இனி வரும் காலங்களில் மேடை நடன கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், நடனக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று தமிழ்நாடு, பாண்டிச்சேரி திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அரசகுளத்தில் கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது ஆபாச நடனம், இரட்டை அர்த்தம் உள்ள பாடல்கள் ஒலிபரப்பப்படுவதாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை விழா ஏற்பட்டாளர்கள் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு உத்தரவிட்டது.

இந்த நிலையில், கோவில்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்துவதால் நடனக்கலையை முறையாக மேற்கொள்ளும் தங்களுக்கு வாழ்வாதாரம் நலிவடைந்திருந்தாகவும், நீதிமன்ற உத்தரவுகளால் தங்களுக்கு இனி வாய்ப்புகள் கிடைத்து வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவர் அஜித் ராஜா கூறியதாவது:
கோவில்களில் ஆபாச நடனம் ஆட கூடாது என்பதை எங்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோவில்களில் ஆபாச நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இது ஒரு மகிழ்ச்சிகரமான தீர்ப்பு. அதற்கு அந்த நீதியரசர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே எங்கள் தொழில் இருக்கும். அதில் வரும் வருமானத்தை கொண்டு தான் அடுத்த ஆறு மாதங்கள் வாழ்வாதாரம் இருக்கும்.

தேர்தல் வரும்போது மட்டும் தான் அரசியல் கட்சியினர் கண்ணில் தெரிகிறோம். தேர்தல் வரும் போது எம்ஜிஆர், கலைஞர், உள்ளிட்டோர் போல் வேடமணிய நாங்கள் தென்படுகிறோம். அதை தவிர்த்து அரசு சார்பில் தங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. எவ்வித நலவாரியமும் அமைக்கப்படவில்லை.

கரகாட்டத்தில் ஆபாசம் தலைவிரித்து ஆடுகிறது. அதற்கு அங்கீகாரம் உள்ளது. ஆனால் எங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை. தற்போது வரை நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அழிவு நிலையில் இருந்த தங்களின் நிலைமை தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் இனி உயரும் என நம்புகிறோம்.

ஆபாச நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு பணம் கொடுக்க பலரும் தயாராக உள்ளார்கள் ஆனால், நாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், எங்களுக்கு நல்ல தொகை கொடுக்கவோ, உதவி புரியவோ யாரும் முன்வருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.