வாடகை வீட்டில் வசித்த காமராஜ் பல கோடி சொத்துக்களை வாங்கி குவித்தது எப்படி..?

சென்னை: வீடு கிடைக்காமல் திணறியவர் பின்னர் வாடகை வீட்டில் வசித்து வந்த காமராஜ், பல கோடி ரூபாய் சொத்துக்கு விற்பனை அதிபதியானார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மன்னார்குடி மாவட்டம் சோத்திரியத்தைச் சேர்ந்த ராஜகோபாலின் மகன் காமராஜ். இவர் 1980ல் மன்னார்குடி ராஜகோபாலசாமி கல்லூரியில் சேர்ந்தார்.

அப்போது, மன்னார்குடியில் அவர் தங்குவதற்கு கூட உறவினர்கள் யாரும் இடம் தரவில்லை. இதனால், மன்னார்குடியில் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு பணியில் இருந்த கருப்பு பூனை படை பைங்காநாடு அசோகன் என்பவர் வீட்டில் தங்கி படித்தார். சசிகலாவை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கும் பொழுது பைங்கநாடு அசோகன் என்பவரையும் கட்சியை விட்டு நீக்க காமராஜ் காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அப்போது மன்னார்குடி அதிமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் என்பவரின் அறிமுகம் காமராஜுக்கு கிடைக்கிறது. இதனால், 1982ல் கல்லூரியில் காமராஜை மாணவர் தலைவராக்குகிறார் ஞானசேகரன். அப்போது மன்னார்குடி அதிமுகவில் ஞானசேகரன், ஞானசுந்தரம் என இரண்டு பிரிவு செயல்பட்டு வந்தது. அதில் ஞானசுந்தரம் குரூப்பை சேர்ந்தவர்கள் ஞானசேகரன் குரூப்பை சேர்ந்த பட்ராஜ் என்பவரை கொலை செய்தனர்.

இதில் ஐ விட்னஸ் காமராஜ். அதேநேரத்தில், ஞானசுந்தரம் எம்எல்ஏவாக இருந்ததால் ஐ விட்னஸ் காமராஜ் அந்த அணிக்கு தாவி பிறல் சாட்சியாகி விட்டார். அதன் பிறகு அதிமுக ஜெ அணி- ஜா அணி என பிரிந்தது. ஜா அணிக்கு ஞானசுந்தரம் அணியுடன் சென்று விடுகிறார். இதுவரை தங்க இடம் இல்லாமல் மன்னார்குடி பூர்ணா லாட்ஜ் வராண்டாவில் தான் தங்குவார் காமராஜ். இன்று அந்த விடுதி உரிமையாளராக காமராஜ் உள்ளார்.

ஜா அணியில் இருக்கும் போது தரக்குறைவாக மேடைகளில் அதிமுகவினரையே பேசுவார். 1988ல் இவரது கல்லூரி நண்பர் பாலகிருஷ்ணன் சகோதரியை ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். பிறகு இரு அணிகளும் இணைந்தவுடன் அழகு திருநாவுகரசுடன் நெருக்கமாகிறார். அழகு திருநாவுக்கரசு மூலம் கோட்டூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆகிறார். அழகு திருநாவுகரசை திவாகரிடம் போட்டு கொடுத்து விட்டு அவரை கட்சியின் பொறுப்புகளில் இருந்து காலி செய்துவிட்டு, திவாகருடன் காமராஜ் நெருக்கமாகிவிட்டார்.

பின்னர் திவாகர் மூலம் கோட்டூர் ஒன்றிய துணை செயலாளர், பிறகு ஒன்றிய செயலாளர் ஆகிறார். இந்த காலகட்டத்தில் மன்னார்குடி பழைய பஸ் ஸ்டான்டில் வாடகை காலனி வீட்டில் குடி இருந்தார் திவாகர். பின்னர் திவாகர் மூலம் 1998 ல் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆகிறார். இந்த காலகட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் எம்.ராஜேந்திரன் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட திவாகர் மற்றும் சசிகலா மூலம் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு வருகிறார் காமராஜ்.

போயஸ் கார்டன் சென்று குடவாசல் எம்.ராஜேந்திரனைப் பற்றி ஜெயலலிதாவிடம் கொலைகாரர் வன்முறையாளர் என்று புகார் கொடுத்து திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆகிறார். 2001ல் திவாகர் பரிந்துரையில் ராஜ்யசபா எம்பியாகிறார். எம்பியாக இருக்கும்போதே 2006 சட்ட மன்ற தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் நின்று தோல்வியடைந்தார். 2011ல் திவாகர் பரிந்துரையில் நன்னிலம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று அமைச்சரானார்.

அதன் பிறகு திவாகரை பற்றி ஜெயலலிதாவிடம் போட்டு கொடுத்து அவரையும் காலி செய்து விட்டார்.2016 தேர்தலில் போட்டியிட ஆர் காமராஜுக்கு சீட்டு இல்லை என்று சசிகலா முடிவு செய்தார். டிடிவி தினகரன் இளவரசி ஆகியோரைப் பிடித்து மீண்டும் நன்னிலம் தொகுதியில் சீட்டு வாங்கி வெற்றி பெற்று உணவுத்துறை அமைச்சரானார். இன்று இவரின் உறவுகள் பல ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி.

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை தொடர்பாக விரிவான விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் காமராஜ், இனியன், இன்பன், சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.இந்நிலையில் மொரீஷியஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முன்னாள் அமைச்சர் காமராஜ் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெல்டாவில் பல இடங்களில் பினாமி பெயர்களில் அவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது.