ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் தான்… பதவி இன்னும் காலாவதி ஆகவில்லை … எடப்பாடி அடித்த அந்தர் பல்டி..!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்திருக்கிறார் எடப்பாடி. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டது.

ஓபிஎஸ் இனி பொருளாளர் மட்டுமே என்று சொன்ன எடப்பாடி, தான் தலைமை நிலைய செயலாளர் மட்டுமே என்று சொல்லி வந்தார். அதனால்தான், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் கையெழுத்திட்டு அனுப்பிய கடித்தை வாங்க மறுத்தார் எடப்பாடி. ஆனால், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக நீடிக்கிறார் என்று பதில் அளித்துள்ளனர். எடப்பாடி தரப்பு அடித்த இந்த அந்தர் பல்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வரும் 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். கட்சியின் விதிப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரம் இருக்கிறது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை என்பதால் 11ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஓபிஎஸ். பொதுக்குழுவைக் கூட்ட 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் . அந்த விதிகள் பின்பற்றப்படவில்லை . அதனால் பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அனல் பறந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் ,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளின் தற்போதைய நிலை என்ன?அப்பதவிகள் காலாவதி ஆகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் ? என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி தரப்புக்கு உத்தரவிட்டார்.

இதை அடுத்து இன்று பிற்பகல் 2. 15 மணிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று விசாரணை நடந்தது. அப்போது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் நீடிக்கிறார். ஆனாலும் ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக நினைத்து ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அவரின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. கட்சி பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றத்தில் முன்கூட்டியே அனுமதி பெற்று இருக்க வேண்டும். முன் அனுமதி பெறாமல் தாக்கு ஓபிஎஸ் தாக்கல் செய்திருக்கும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதிட்டது.

மேலும், கடந்த டிசம்பர் மாத செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர் இதை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்று விதி திருத்தப்பட்டது. செயற்குழுவிற்கு விதிகளை திருத்தும் அதிகாரம் இல்லாததால் பொதுக்குழு ஒப்புதல் வர முடிவு செய்யப்பட்டது . அதன்படி கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று நடந்த பொதுக்குழுவில் இந்த திருத்தம் தாக்கல் செய்யப்படவில்லை. திருத்தம் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதன் அடிப்படையில் நடந்த உட்கட்சித் தேர்தலும் செல்லாது என்றும் எடப்பாடி தரப்பில் வாதிட்டனர்.

இதில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை என்று எடப்பாடி தரப்பு சொன்னதுதான் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவிற்கு எதிராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர்ந்திருக்கிறார் . ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக இணைப்பதாக நினைத்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார் என்று எடப்பாடி தரப்பு வாதத்தை முன் வைத்தனர். வாதத்தின்போது ஓ. பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.