டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபேவை சுட்டுக் கொலை செய்த நபர் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ஷின் சோ அபே. நவீன ஜப்பானின் முக்கிய பிரதமராக இவர் கருதப்படுகிறார்.
பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்த 67 வயதாகும் ஷின் சோ அபே, மருத்துவரின் அறிவுறுத்தல் படி கடந்த 2020ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து இருந்தார்.
இந்தச் சூழலில் நேற்று அவர் ஜப்பான் நாட்டின் நாரா பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே மக்களிடையே பிரசார கூட்டத்தில் பேசினார். அந்தச் சமயத்தில் பின்னால் இருந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. இதனால் ஷின் சோ அபே, அங்கு திடீரென சுருண்டு விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து, அவரது உடலில் இருந்த ரத்தம் கொட்டியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது.
இதை மிக மோசமாகக் காயம் அடைந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு மோசமான நிலையில், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அபே இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை காக்க மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் ஜப்பான் பிரதமர் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா குறிப்பிட்டார். இந்தச் சூழலில் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக 41 வயதான டெட்சுயா யமகாமி என்பவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அபேவை சுட்டுவிட்டு அங்கிருந்த தப்பித்து ஓட முயன்றவரைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த கூடுதல் தகவலாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் அபேவை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதற்காக அவரே சொந்தமாகத் துப்பாக்கி போன்ற ஒன்றையும் தயார் செய்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்துக் கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட டெட்சுயா யமகாமி நாரா பகுதியில் வசித்து வருவர். இவர் ஜப்பானியக் கடற்படை என்றும் அழைக்கப்படும் ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் வீரர் ஆவர். அபே பேசிக் கொண்டு இருந்த போது, பின்னால் இருந்து பதுங்கியபடி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
ஷின் சோ அபே பிரதமராக இருந்த சமயத்தில், அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவரை கொலை செய்யும் நோக்கத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அபேவை கொல்ல வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே இவர் துப்பாக்கியை வடிவமைத்து உள்ளார்.
ஷின்சோ அபே சுடப்படும் முன்னர் அங்கு எடுக்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் டெட்சுயா யமகாமி கருப்பு பேக் உடன் கண்ணாடி அணிந்து கொண்டு, க்ரே டீசர்ட் போட்டுக் கொண்டு நிற்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும், பாதுகாப்புப் படையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவனிடம் நடந்த விசாரணையில், ஷின்சோ அபே மீது திருப்தியில்லை. இதனால், அவரை கொலை செய்ய விரும்பினேன் என வாக்குமூலம் அளித்துள்ளதாக ஜப்பான் நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.