ஹோலி பண்டிகை… குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து.!!

டெல்லி: நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

ஒருவருக்கொருவர் வர்ணங்களை பூசி கொண்டாடும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “நாட்டு மக்களுக்கு ஹோலி திருநாள் வாழ்த்துக்கள். இந்த நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க திருவிழா இந்தியாவின் விலைமதிப்பற்ற கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாகும். இந்த வண்ணத் திருவிழா, நாட்டு மக்களிடையே அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை மேலும் வலுப்படுத்தி, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வர வேண்டும் என நல்வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

அதேபோல பிரதமர் மோடி கூறுகையில், “நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்” என்று வாழ்தியுள்ளார்.

அதேபோல, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சியாச்சின் பனி மலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஹோலியை கொண்டாடியுள்ளார்.

சென்னையில் ஹோலியை கொண்டாடுபவர்களுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், “வண்ணங்களின் திருநாளான ஹோலி திருநாள் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதிலும், உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. வெற்றி , மகிழ்ச்சி, கொண்டாட்டம் ஆகியவற்றின் அடையாளம் தான் ஹோலி திருநாள். மக்களின் வாழ்க்கையில் எல்லா நாளும் அமைதி, நலம், மகிழ்ச்சி, வெற்றி, வளமை, கொண்டாட்டம் ஆகியவை நிறைந்திருக்க வேண்டும் என்று கூறி இந்த நாளில் ஹோலி கொண்டாடும் அனைவருக்கும் வண்ணமயமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், “தீமையை நன்மை ஒழித்து வெற்றி கண்டதன் கொண்டாட்டம் தான் ஹோலி திருநாள். தமிழ்நாட்டிலும் தீமைகளை ஒழித்து நன்மைகள் வெற்றி காண வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது” என வாழ்த்தியுள்ளார்.